Pages

Monday, September 16, 2013

சொல்வதெளிதாம்..

அமைதியாய் நகர்ந்துகொண்டிருந்த வரிசைகளில்
எறும்பாய் ஊர்ந்து சென்ற வாகனங்கள்
முன்னும் பின்னுமாய் முட்டிமோதியும்
தவித்துத் தடுமாறியும்
நகர முயன்றுகொண்டிருந்தன.
கிடைத்த இடைவெளிகளில் புகுந்தவையோ
நங்கூரமிட்டுக்கொள்ள,
அடைபட்ட அவஸ்தையில்
அலறிக்கொண்டிருந்தன அத்தனையும்
தொண்டை கிழிய..
கடலாய்ப் பரந்திருந்த போக்குவரத்தை
வாய்க்காலாக்கிய பெருமையுடன்
மிட்டாய்க்காக அடம்பிடிக்கும் குழந்தையென
கால் பரப்பி நின்றிருந்தது
நாற்சந்திச்சாலை நடுவில் வாகனமொன்று
பசுந்தழைகளை உடுத்திக்கொண்டு..
“பத்து பேராய்ச் சேர்ந்தால் ஓரத்திற்கு நகர்த்தி விடலாமே,
மற்றவர்களுக்கு இடையூறில்லாதபடி..”
என்றபடி
எத்தனையாவது மனிதனாகவோ
கடந்து கொண்டிருந்தேன் நான்.

Monday, July 29, 2013

தூதும்,, சமாதானமும்.

கல்லெறிபட்ட தேன் கூடாய்க்
கலைந்து கிடந்த வீட்டில்
இரு வேறு கட்சிகளாய்ப்
பிரிந்து நின்று
உப்புப் பெறாத விஷயத்துக்காய்,
விஷவார்த்தைகளால் சுட்டுக் கொண்டார்கள்
தலைவனும் தலைவியும்.

பறக்கும் தட்டுகளும், கண்ணீர்க் குண்டுகளும்
இறைந்து கிடந்த போர்க்களத்தில்,
சட்டென்று ஏற்றப்பட்டது
சமாதானக்கொடி
ஓடிச் சென்று கட்டிக் கொண்ட
மழலைத்தூதுவர்களால்..

எவர்க்காய்ப் பரிவதென்றறியாமல்
மருண்டு நின்றவர்களுக்காய்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட
முதுகுக்குப்பின் கைகுலுக்கிக்கொண்ட
தூதுவர்களால்
நிரம்பி வழிந்தது மனக்கருவூலம்
வற்றாத அன்பால்..

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட நவீன விருட்சம் மின்னிதழுக்கு நன்றி..

Monday, May 6, 2013

காகிதக்குறிப்புகள்.. (வல்லமையில் வெளியானது)


காற்தடம் பதியாப்பாதையெனவும்,
எழுதப்படாத வெற்றுக்காகிதமெனவும்
முன் நீண்டு கிடக்கிறது
இன்றைய தினம்.

புட்களின் அதட்டலுக்குப் பயந்த
விடிகாலைச்சூரியன்
மேகப்போர்வை விலக்கி
மெல்ல முகம் காட்டவும்
தலையசைத்துப் பூமழை சொரிந்து
பச்சையம் சுமந்த பயிர்களெலாம்.
வரவேற்பு அளிக்கவுமென
நன்றாகத்தான் ஆரம்பிக்கின்றன
ஒவ்வொரு தினமும்,
வெற்றுக்காகிதமென.

ஏதேனும் சில வரிகளாவது கிறுக்கப்படலாம்,
மனங்களை வெல்லும்
வண்ண ஓவியமொன்று வரையப்படலாம்,
வரலாற்றைப் புரட்டிப்போடும்
சகாப்தங்கள் எழுதப்படலாம்,
அல்லது
எதற்குமே உபயோகப்படுத்தப்படாமல்
கசக்கி வீசப்படவும் கூடும்.
எதற்குமே அது கோபித்துக் கொள்வதில்லை.
மீண்டும் மீண்டும் வந்து
காலைக்கட்டிக்கொள்ளும்
செல்லக்கோபத்திற்குப் பயப்படாத குழந்தையாய்
வந்து கொண்டுதான் இருக்கிறது நம்மிடம்.

தான் சுமந்திருக்கும் பூக்களின் நறுமணத்தில்
தன்னை மறந்து
பால்வெளியில் உயரப்பறக்கும்
மிதவைத்தருணங்களில்
சேற்றிலும் விழுந்து தொலைத்து விடுகிறது,
சட்டென இழுபட்டு.
கருப்புக்கறைகளைக் காலம் முழுக்கச் சுமக்க நேரிட்ட
அவலத்தையெண்ணி,
அவை நினைவு கூரப்படும்போதெல்லாம்
மவுனத்தைப் பூசிக்கொண்டு விடுகிறது.

அற்புதமானதாகவோ சாதாரணமாகவோ
ஏதேனும் ஒரு
கிறுக்கலையாவது பரிசளிப்பது மிக நன்று.
அதை
வெறுமையாகவே விட்டுச்செல்வதை விட.

டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

Friday, April 26, 2013

தாயம்.. (அதீதத்தில் வெளியானது)

களத்திலிறங்கிய காய்
பழமாகவில்லையாம்..
விரும்பிய எண் வரவில்லையென
சபிக்கிறார் பகடைக்காய்களை,
உருட்டியதே தான்தானென்பதை
மறந்து விட்டு.
கிடைத்த புதையல்
ஆணாக இல்லையாம்..
பிறந்தது பெண்ணென்று
வெறுக்கிறார்
பெற்றதே தான்தானென்பதை
வசதியாய் மறந்து விட்டு.
சபிக்கப்பட்டவர்களாய்
ஒதுங்கிக்கிடந்த காயும்
ஒதுக்கப்பட்ட பெண்ணும்
கிடைத்த துரும்பையூன்றி நகர,
தாயப்பகடையுருட்டி
சிம்மாசனத்தில் அமர்த்தியது காலம்..
உரிமை கொண்டாடி மார்தட்டிக்கொண்டும்
சாமரம் வீசிக்கொண்டும்
காலடியில்
விழுந்து கிடக்கும்
பச்சோந்திகளைத்தாண்டிச் செல்கின்றன
மேலும் சில காய்கள்,
காலம் மட்டும்
இன்னும் அதே நேர்ப்பார்வையில்..

டிஸ்கி: வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.

Monday, April 1, 2013

பறவைகள் பூத்த மரம்.. (அமீரகத்தமிழ்மன்றத்தின் ஆண்டுவிழா மலரில் வெளியானது)

இலை நிறைந்து
அடர்ந்த பழங்களினூடே
அலகுகளின் வழி ஒலிபரப்பிக்கொண்டிருந்தன
சங்கீதத்தை
கிளை நிறைந்து படர்ந்திருந்த பறவைகள்
கோடி வீட்டு மாமரத்தில்.
உதயாஸ்தமனங்களை அறிவிக்கும்
சம்பளமில்லாப்பணியாளர்களுடன்
கழிந்தன
வீடு கொள்ளாமல்
நிரம்பி வழிந்த விருந்தாளிகளின் பொழுதுகள்
ரசனையோடு சிலருக்கும்
சற்றே எரிச்சலோடு பலருக்கும்.
கொத்துக்கொத்தாய்ப் பூத்த
பறவைகளின் வாசத்தில்
கிறுகிறுத்து நின்ற மாமரமும்
கொட்டிய செல்வத்தில் புரண்டெழுந்த தனகோடியும்
ஒற்றைக்கவண்கல்லுக்கு
அத்தனையும் உதிர்த்து நிற்க
வெறிச்சோடிய முற்றத்தில் விழுந்து கிடக்கின்றன
தூவிகள் ஒட்டிய
ஒன்றிரண்டு மாம்பிஞ்சுகள். 

டிஸ்கி: அமீரகத் தமிழ்மன்றத்தின் பதின்மூன்றாம் ஆண்டுவிழா மலரில் வெளியானது.

அதீதத்திலும் வெளியிட்டுச் சிறப்பித்த ஆசிரியர் குழுவிற்கு நன்றி.

Wednesday, March 6, 2013

ஸ்வரக்கொத்து.. (இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது)

நினைவுப்பேழை
திறந்து கொள்ளும் நொடிகளிலெலாம்
மீட்டிச்செல்கிறது மனவீணையை,
இழை இடைவெளியில்
புகுந்து பரவும் சுகந்தக்காற்று.

மல்லிகையாய், சந்தனமாய்
மொட்டவிழ்ந்து மணக்கும்
ஒவ்வொரு நினைவிழையின்
மெல்லிய மீட்டலிலும்
பொங்கி வழிகின்றன
சுபஸ்வரங்களும்
சில சமயங்களில் அபஸ்வரங்களும்..

ரோஜாக்கள் மணக்கும் மண்ணில்தான்
ஊமத்தம்பூவும் மலர்கிறதெனினும்
ஒவ்வொரு ரோஜாவாய்ச் சேர்த்து நிமிர்கிறேன்,
இதயம் நிரப்பிச் செல்கிறது
ஸ்வரக்கொத்து..

பி.கு: இன்அண்ட்அவுட்சென்னை இதழில் வெளியானது

Wednesday, February 20, 2013

சிறகுதிர்த்த மின்மினி.. (வல்லமையில் வெளியானது)



இணையத்தில் சுட்ட படம்..
மின்மினி மந்தையினின்று
வழி தப்பிய எரிகல்லொன்று
கவணிடை
எறிகல்லாய்ப்புறப்பட்டது..
வெகுதூரப்பயணமோவென
ஏங்கி வினவிய சகாக்களைப்
புறங்கையால் ஒதுக்கிவிட்டு
உல்லாசமாய்ப்புறப்பட்ட உற்சாகத்துடன்
துள்ளித்துழைந்தது அண்டப்பெருவெளியில்.
இலக்கில்லாப்பயணத்தில்
அதிரும் பிம்பங்களைச் சிதற விட்டபடி
துழாவித்துழாவி உணர்கொம்புகள் நீட்டி
முன்னேறிக்கொண்டுதானிருந்தது அது.
இலக்கில்லா எவரோ.. எதுவோ.. 
ஓர் நாள்
இலக்கினை அடைந்தே தீரவேண்டிய
நியதிக்குட்பட்டு
பூமாதேவியிடம் மயங்கி
முத்தமிட முயன்றதில்
சீறி எரித்தது
லக்ஷ்மண ரேகை..
உதிர்ந்து வீழ்ந்தது மின்மினி
ஆயிரமாயிரம் பரப்பளவில் தன் சிறகுகளை உதிர்த்தபடி..

டிஸ்கி: வல்லமையில் வெளியானது.

Sunday, February 17, 2013

உணர்வுகளும் அமைதியும்..(இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது)

பிளிறலுடன் நிலையத்தினுள்
நுழைந்தது ரயில்
மதம் பிடித்ததுவோ எனவஞ்சும்படி
ஆர்ப்பரித்துக்கொண்டு.
அரைகுறை உறக்கத்தில்
ஒவ்வொரு இலையாயுதிர்த்துக்கொண்டிருந்த
அரச மரமொன்று
தடதடவென அகிலமெங்கும் கிடுகிடுத்ததில்
சரசரவென வியர்த்துக் கொட்டியது
இலைத்துளிகளை
மடியில் உறங்கிக்கொண்டிருந்த
நாய்க்குட்டியின் மேல்..
அதிகபட்ச எதிர்ப்பாய்த்
திரும்பிப்படுத்துறங்குதலைக் காட்டிய
நாயிடம் கோபித்துக்கொண்டு
வெளியேறிக்கொண்டிருந்தது ரயில்
புயலென
கைகாட்டி மரத்தின் அசைவுக்கு
மனிதர்களை உதிர்த்து விட்டு..

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட இன் அண்ட் அவுட் சென்னை இதழுக்கு நன்றி.

Wednesday, January 30, 2013

ரயிலோடும் வீதிகள்.. (நவீன விருட்சத்தில் வெளியானது)

(இணையத்தில் சுட்ட படம்)
கயிற்று வளையத்துள்
அடைபட்டிருந்த பெட்டிகளெல்லாம்
அலுத்துக்கொண்டனர்,
ரயில் மெதுவாகச்செல்வதாக..
குதித்துக் கும்மாளமிட்டுச்
சூறாவளியாய்க் கிளம்பிய ரயில் பெட்டிகள்
ஒன்றுக்கொன்று இடித்துத் தள்ளியதில்
தடம்புரண்டோடிய
உற்சாக ஊற்று
சற்றுச்சுணங்கிற்று அவ்வப்போது.
பிள்ளையார் கோவில் நிறுத்தம்
இந்நேரம்
தாண்டப்பட்டிருக்க வேண்டுமென்ற
மூன்றாவது பெட்டி காளியப்பனை
ஆமோதித்தாள்
ஐந்தாவது பெட்டியான வேலம்மாள்.
“வெரசாத்தான் போயேண்டா”
விரட்டிய குரலுக்குத்தெரியாது,
ரயிலோட்டுனருக்கு
அன்றுதான்
காலில் கருவை முள் தைத்ததென்பது.
அலுத்துப்போன கடைசிப்பெட்டி
சட்டென்று திரும்பிக்கொண்டு இஞ்சினாகியதில்
வேகம் பிடித்த ரயிலில்
இழுபட்டு அலைக்கழிந்து வந்தது
முன்னாள் இஞ்சின்
வலியில் அலறிக்கொண்டு..

டிஸ்கி: வெளியிட்ட நவீன விருட்சத்திற்கு நன்றி.

Thursday, January 24, 2013

தொலைந்த நிழல்..(நவீன விருட்சத்தில் வெளியானது)

மதிய வெய்யில் உறங்கிக்கொண்டிருந்த வீதிகளில்
தேடலுடன் நகர்ந்து கொண்டிருந்தது அந்த நிழல்.
பூவரச மரத்தின் கீழ் துயின்ற
பூச்சருகுகளின்
உறக்கம் கலைக்காமல்
வார்த்தைக்குள் வராத சங்கீதத்தை
வாய்க்குள் மென்று கொண்டே
தான் தொலைந்த இடத்தைத்
தேடிக்கொண்டிருந்தது.

கலகலப்புகளிலும்
சின்னக்கொலுசுகளின் கிணுகிணுப்புகளிலும்
ஆலமர ஊஞ்சல்களிலும்
தன்னைத்தேடிச் சலித்த அது
ஜவ்வு மிட்டாய்க்காரனின் பின்னே
போய்க்கொண்டிருந்தது
தானும் கைதட்டிக்கொண்டு.

பல்லாயிரம் வாசனைகளுக்கிடையே
மிதந்து வந்த தன்னுடைய வாசனை
கால்களைக்கட்டியிழுக்க
தொலைந்த இடம் சேர்ந்த மகிழ்வுடன்
ஓடிச்சென்று விரல் பற்றிக்கொண்டு
பாண்டியாடத்தொடங்கியது
பாவாடை பறக்கப் பறந்து கொண்டிருந்த சிறுமியுடன்.

டிஸ்கி: நவீன விருட்சத்திற்கு நன்றி :-)