Pages

Wednesday, March 9, 2011

பொதுவான புள்ளியொன்றில்..

அலைகளையும் தலைகளையும்
எண்ணிக்கொண்டும்,
கடலுடன் சேர்ந்துறுமும்
வயிற்றுக்கு பதிலளிக்கவொட்டாமல்
தகிக்கும் மனதின் சூட்டை
கடலைக்கு கடத்தியபடியும்;
தன்பக்கம் திசைதிரும்பும் கால்களை எதிர்நோக்கியும்
காத்துக்கொண்டிருந்த பொழுதுகளிலெலாம்,
கண்கள் பூத்துப்போகத்தான் செய்கிறது
கடற்கரையோர கடலைவியாபாரிக்கு..
அவரவர் சட்டைப்பையைத்துழாவும் கைகள்
வெளிக்கொண்டு வருவதெலாம்
ஏதோவொரு காகிதமாகவும் கைக்குட்டையாகவும்
இருக்கும்போதெலாம்,
பள்ளிக்கட்டணமும், மருந்துச்செலவும்
காற்றிறைத்த மணலாய்
உறுத்திக்கரிக்க..
உள்ளூர சலித்துக்கொள்கிறார்
பிளாஸ்டிக் பணயுகத்தையும்
பாக்கெட் தின்பண்டங்களைப்பற்றியும்..
தன்னிச்சையாக அள்ளியிறைத்தாலும்
சற்றுத்தாராளமாகவே விழுகின்றன கடலைமணிகள்,
ஒண்டிக்கொண்ட சிறு அவகாசத்தில்
நட்பாகிப்போன புறாவொன்றுக்கு..
நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்..
வாடிக்கையாளருக்காகவும் சிந்தும் கடலைக்காகவும்.....
காத்திருத்தலென்னும்
இருவரையும் இணைக்கும்
பொதுவான புள்ளியொன்றில்.

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி..

Wednesday, March 2, 2011

முன்னேற்றம்..


திட்டமிடப்படாமலும்
எல்லாம்
நடக்கிறதெனினும்;
தற்செயலாகவும்
மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை..
எவருக்காகவும்
எப்பொழுதும்
காத்துக்கொண்டிருக்காத.. காலம்.
இலையுதிர்காலத்து மரமென
வாய்ப்புகளை உதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

சேமிக்கப்பட்ட கனவுகள் ஒவ்வொன்றும்,
நெஞ்சக்கனலின் தணியாவெப்பத்தில்
வளர்சிதையுமுன்
பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்க..
காற்று நகர்த்திச்சென்று சேர்க்கிறது
ஒவ்வொரு இலையாக..

சருகாகவிட்டு சோம்பிக்கிடக்கின்றன
தலைவிதியென்றும்
தலையெழுத்தென்றும்
தன்னைத்தானே நொந்துகொண்ட
கிணற்றுத்தவளைகள்..
கனவுகள் காலாவதியாகுமுன்
உதறியெறிந்த வாய்ப்புகளை
மீண்டும் கண்டடையத்தெரிந்தவை மட்டுமே
மீண்டு கரைசேர்கின்றன..

ஆசைக்கும் அறிவுக்குமான போட்டிக்களத்தில்
வாய்ப்புகள் ஜெயித்துவிட
விருப்பங்கள் இல்லாமலேயே
மாற்றி நடப்பட்டாலும்..
பெருங்கடலாயினும், குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக்கற்றுக்கொண்ட மீன்கள்.

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி..