Pages

Thursday, December 15, 2011

வீடென்பது...


(படம் பிடிச்ச என்னோட காமிராவுக்கு நன்றி :-))
அவனும் அவளுமான சிற்றோடைகள்
கை கோர்த்து நடந்த
பாதச் சுவடுகள் பற்றி நடந்த சிறு நதிகள்
சங்கமமாயின வீடெனும் கடலில்..
வீடெனும் சொல்
திறந்து விட்டு விட்ட
நினைவுப் பேழையினுள் அமிழ்ந்து கிடந்த
ஞாபகப்பூச்சிகளின் சிறகடிப்பினூடே,
கீற்றுத்துண்டாய் வெட்டி மறைகிறது
கம்பிகளினூடே வெயிலில்
பிடிவாதமாய் நனையும் மருதாணிப்பூக்கள்
வாசலில் வரைந்த வாசனைக்கோலம்..
பூட்டப் பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னே
ஒளிந்து நிற்கும் ஞாபகங்கள்
கைப்பிடித்து நலம் விசாரித்துச் செல்கின்றன
இப்போதாவது வந்தாயாவென..
தனக்கென்றதோர் கூடாயும்
அன்னியோன்னியமாயும் இருந்து வந்து,
அடுத்த தலைமுறையின் முடி சூட்டலுக்குப் பின்
உரித்தெறியப்பட்ட பாம்புச் சட்டையாய்
வீசப்பட்ட பின்னர்
அன்னியப் பட்டும் நிற்கிறது
வீடென்பது சிலருக்கு.

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-)

Wednesday, November 23, 2011

எவரேனும்..


விருந்தினர் வரவைக்
கரைந்தறிவிக்கும் காக்கை
தானே ஒரு
விருந்தினரானது;
அப்பாவின் திதியன்று.. 
அவரே வந்ததாய் எண்ணி
பரிமாறிக் கொண்டிருக்கிறாள் அம்மா,
அப்பாவுக்குப் பிடித்ததையெல்லாம்..
தலை சாய்த்து உண்ணும்
காகத்தின் பார்வை
மின்னலாய்ச் சொடுக்கிப் போகிறது
மின்கம்பத்தில் முன் தினம்
கருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்
கருகாத கேள்வியொன்றையும்.. 
பகிர்ந்துண்ணவும் பாசம் கொள்ளவும் மட்டுமன்றி,
பிண்டமிடவும் பித்ருவாய் வரவும்
அவற்றின் உலகிலும்
எவரேனும் இருக்கக் கூடுமோ?

டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-)


Wednesday, November 9, 2011

மற்றுமோர் அவதாரம்..


படம் கொடுத்து உதவிய இணையமே உனக்கு நன்றி..
தொடர்ந்த வாசிப்பினால்
ஓரம் கிழிந்த புத்தகங்கள்
மேலும் கிழிக்கப்பட்டன
பொட்டலம் கட்டப்படவென..
இதயத்தின் அருகிலோ அல்லது
ஏதோ ஓர் மூலையிலோ,
மாறுபடவும் கூடும்,
அதன் முக்கியத்துவமும் இருப்பிடமும்
உள்ளடக்கத்தினைப் பொறுத்து..
கடலையோ வைரமோ
அல்லது        
சுமக்க நேரிட்ட எண்ணக் குவியல்களோ;
ஏதோவொன்றின்
உபயோகம் தீர்ந்த பின்
கசக்கி வீசப்பட்டாலும்
மேலும்
உபயோகப் படவெனக் காத்திருக்கின்றன,
கோணியும் பசியும்
சுமந்தலையும்
இருகால் மற்றும் நாற்கால் உயிர்களுக்காய்,
குப்பையென அவதாரமெடுத்து..


டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..

Tuesday, October 4, 2011

தெய்வீக சங்கீதம்..

(படத்துக்கு நன்றி - இணையம்).
வெங்கோடையின் பின்னிரவில்
மழை வரம் வேண்டி
மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு
பன்னீர்த் துளிகளை
தட்சிணையாய்த் தெளிக்கின்றன,
மலை முகட்டில்
சற்று இளைப்பாறி விட்டு,
நீர்க்கர்ப்பம் தாங்கிப் பறக்கும்
மடி கனத்த மஞ்சுகள்..

தவளைகளின்
நாராச 'கொர்கொர்' சத்தத்திலும்,
சில்வண்டுகளின் ரீங்காரத்திலும்,
உணர்கிறான் விவசாயி..
அவன் மட்டுமே அறிந்து மயங்கும்
தெய்வீக சங்கீதத்தை..

மற்றோருக்கெல்லாம் அவதியையும்
சேர்த்துத் தரும் மழை..
பயிர்களையும் உயிர்களையும்,
எப்படியும் காப்பாற்றி விடலாமென்ற
நிம்மதியையும், நம்பிக்கையையும்
மட்டுமே தருகிறது
ஏர் பூட்டும் உழவனுக்கு..

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

 

Thursday, September 22, 2011

அரைகுறையாய்ப் போன கனவுகள்..

மேகத்தில் சற்று தலைதுவட்டிக்கொள்ளும்
ஆவல் கொண்டு,
ஆயிரம் மூங்கில் கால்களூன்றி
ஆஹாவென்றெழுந்த
அலங்கார மாளிகைகள்,
விதிகளை மீறிவிட்டதாய்
அவசரமாய் பிறப்பித்த அரசாங்க தடையுத்தரவால்,
அப்படியே நின்றன அரைகுறையாய்..

செங்கற்தோல் போர்த்தாத
இரும்பு எலும்புக்கூடும்,
முகப்பூச்சு காணாத கற்சுவரும்,
பரிதாபமாய்ப்பொலிவிழந்து,
பல்லிளித்துக்கொண்டு நிற்கின்றன.. மௌனமாய்,
ஆயிரமாயிரம் கதைகள் சொல்லிக்கொண்டு.

தோற்ற மாறுதல்களை உள்வாங்கிக்கொண்டு
காரை பெயர்ந்து நிற்கும் சுவர்கள்,
பாசிகளின் பலத்தில்
தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயன்று தோற்று நிற்க,
சலனமில்லாமல் நிகழ்கின்றன
காட்டுச்செடிகளின் குடியேற்றங்கள்..

கனவு இல்லத்தை
கனவில் மட்டுமே கண்டுகொண்டிருக்கும்
எளியவனின்
ஏக்கப்பெருமூச்சில் படபடக்கின்றன,
தளங்களில் கொட்டப்பட்டு
கல்லாய் மணலாய் உருமாறி,
பளிங்குக்கற்களாய் உறைந்து கிடக்கும்,..
முதலீடு செய்த சலவை நோட்டுகள்..

டிஸ்கி: வல்லமைக்காக எழுதியதை இங்கியும் பகிர்ந்து கொள்கிறேன்.

Monday, September 12, 2011

வாடா மலர்கள்..

என் மீதான உன் காதலை
தவிப்புடன் அடைகாத்த நெஞ்சை
உதடுகளிலிருந்து உதிரும் சொற்களை முந்திக்கொண்டு
காட்டிக் கொடுத்துவிடுகின்றன...
அலைபாயும் உன் கண்கள்;
இறுமாந்து போகிறேன் நான்...

நிராகரிக்கப்படாமல், உனக்கென நிச்சயிக்கப்பட்டதும்
மழையெனப்பொழிந்த உனதன்பால்
நமக்கென ஓர் கனவுலகை படைப்பிக்கிறாய்..
உன் கண்கள் வழியே காணும் கனவும்கூட
சுகமாய்த்தான் இருக்கிறது;
பெருமிதப் படுகிறேன் நான்...

குறுகியும் நீண்டும் கடந்துசென்ற
ஊடலும் கூடலுமான ஒற்றையடிப் பாதைகள்
நமக்கென செதுக்கி வைத்த
ராஜபாட்டையில்
உன் கைத்தலம் பற்றிய உரிமையுடன்
உன் மனதருகே கிசுகிசுக்கிறேன்..
'உனக்கான கடமைகளை எனக்கும் பங்கிடு' என்று..
இம்முறை வியப்பது உன் முறையாயிற்று..

வாழ்ந்த காலங்களின் சுவை
அடிமனதில் இன்னும் தித்தித்திருக்க,
பற்றிய கைத்தலத்தை இன்னும் இறுக்குகிறாய்;
முட்களையெல்லாம் பூவாக்கும் வித்தையை
வயோதிகத்திலும் கைவிடாமல்..
ஏதும் மிச்சப்படாமல்
கரைந்துபோகிறேன் நான்..

உணர்வதற்கும்
உணர்த்தப்படுவதற்குமான இடைவெளியில்
உயிர்ப்புடனும்,
களவுக்கும்
கைத்தலத்துக்குமான பெருவெளியில்
கனவுகளுடனும்,
தலம்பற்றியபின் கடமையுடனும்
வாழ்ந்த காதல்..
வயோதிகத்தின் வாசல்படியில்
சொரிந்து நிற்கும்
ஊவாமுட்களையும்
மலரச்செய்து வாசமாய்;
சொரிந்து நிற்கிறது பன்னீர்ப்பூக்களை,
பிணைந்திருக்கும் இரு நெஞ்சங்களில்..

டிஸ்கி: வல்லமைக்காக எழுதியதை இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன். இந்தத் தளத்தில் இது என்னோட ஐம்பதாவது படைப்பு. தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி :-)


Monday, August 29, 2011

மழலை நிலா..


அமாவாசையன்றும் பட்டுத்தெறிக்கின்றன
பௌர்ணமிச்சிதறல்கள்..
ஜன்னலில் பூத்த
மழலையின் மிழற்றல்களில்..

சோறூட்டவென்று
துணைக்கழைக்கப்பட்ட நிலா...
இடுப்பிலிருக்கும் தன் பிம்பத்தை, தானே ஒப்பு நோக்கி
வெட்கித் தலைகுனிகிறது..

சாட்சிக்கழைக்கப்பட்ட
நட்சத்திரங்களோ,.. சிதறியோடி
மண்ணில் ஒளிந்துகொள்கின்றன,
ஒருவாய்ச்சோற்றுருண்டையிலிருந்து..

தீர்ப்பு சொல்லவந்து
தோற்றுச்சரணடைகின்றன
இசைக்கருவிகள்,
தென்றலெனத் தழுவும்,....
'அம்மா' என்ற மழலைச்சொல்லின் முன்...

டிஸ்கி: இந்தக் கவிதை வல்லமையில் வெளியானது.

Friday, August 19, 2011

சுயமும்..சுதந்திரமும்.

கூண்டுக்கு வெளியே
பெருங்காடொன்று இருக்கும்
என்றெண்ணி,
சுதந்திரமாய் வாழும் கனவில்
தப்பி வந்தது வரிக்குதிரையொன்று..
காடாய்க்கிடந்த
நிலமெல்லாம்
மக்கள் முளைத்துக்கிடப்பதையும்,
மாக்களாய் நடந்துகொள்வதையும் கண்டு
தலைசுற்றியமர்ந்த வரிக்குதிரையிடம்,
தும்பிக்'கையை' நீட்டியது யானையொன்று..
பழக்கதோஷத்தில்...
யானையே
பூனையாய் அடங்கிய இடத்தில்,
அடையாளங்களை இழந்து
கழுதையாய் குதிரையாய் வாழவிழையாமல்,
சுதந்திரமற்ற அடிமைவாழ்வெனினும்
சுயமாய் வாழ்வதே மேலென்றெண்ணி,
கூண்டுக்குள் ஓடி
இறுகத்தாழிட்டுக்கொண்டது வரிக்குதிரை..
சுதந்திரமில்லாத சுயமும்
சுயமில்லாத சுதந்திரமும்
கெக்கலி கொட்டிச்சிரித்துக்கொண்டிருந்தன..


டிஸ்கி: இந்தக்கவிதை வல்லமையின் சுதந்திர தின சிறப்பிதழில் வெளியாகியிருக்கிறது.

Wednesday, August 17, 2011

அறிதுயில்..

                                             

ஆயிரம் முறை சொல்லியனுப்பியும்

இனிப்புடன் வரமறந்த
தந்தையின் மீதான நேற்றைய கோபத்தை
ஒரு கண்ணிலும்; ..
உடன் விளையாட வரமறுத்த
அன்னையின் மீதான இன்றைய கோபத்தை
இன்னொரு கண்ணிலும்
சுமந்துகொண்டு;
கட்டிலிலேறி கவிழ்ந்துகொள்கிறாய்..

என்னுடைய எல்லா
சமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது….
உன்னுடைய செல்லக்கோப
கன்னஉப்பல்…

அம்மாசித்தாத்தாவின் பஞ்சுமிட்டாய்வண்டி
தூதனுப்பிய மணியோசையும்கூட
உனது பொய்த்தூக்கத்தை
கலைக்கமுடியாமல் வெட்கி;
முகம் மறைத்தோடுகிறது இருளில்..

தாயின் குரலும்
தந்தையின் சீண்டலும் பலனளியாமல்..
ஊர்ந்துவந்த நண்டும் நரியும்கூட
விரல்விட்டு இறங்கியோடிவிடுகின்றன..

இனிப்புப்பெட்டியின் கலகலச்சத்தம் ஏற்படுத்திய
இமைகளுக்குள்ளின் மெல்லிய நடமாட்டத்தை,
அவசரமாய் தலையணையில் முகம்புதைத்து
கைதுசெய்கிறாய்..

கொஞ்சலும் கெஞ்சலும் பயனற்றபொழுதில்;
மிட்டாய்ப்பெட்டி திரும்பக்கொடுக்கப்பட்டுவிடுமென்ற
செல்லமிரட்டலுக்கு உடனே பலனிருக்கிறது!!..
‘தூங்கும் பிள்ளைக்கு காலாடுமே’யென்ற
பல்லாண்டு பழைய அங்கலாய்ப்புக்கு
உடனே பதில்சொல்கிறாய் ‘தற்செயலாய்’ விரலசைத்து..

பொய்த்தூக்கமேயெனினும்
அவ்வழகும் ரசிக்கக்கூடியதேயன்றோ!!!!!..
இதற்காகவென்றேனும், அடிக்கடி ,
அறிதுயில் கொள்ளடா..
என்,
அனந்த பத்மநாபனே………


டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி. ஏற்கனவே அமைதிச்சாரல் தளத்தில் பகிர்ந்திருந்தாலும் ஒரு கணக்குக்காக இங்கேயும்.

Monday, July 25, 2011

நழுவிச்செல்லும் காலம்..


ஆழ்நிலைக்கனவுகளொன்றில்
பிடிமானத்துக்காய்
துழாவிய கைகளில்
சிக்காது விளையாடுகின்றன;
எப்போதோ
நினைவடுக்ககத்தில் சேமிக்கப்பட்டிருந்த
பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்கும்
நினைவுகள்,
பெருங்கனவின் தணியாவெப்பத்தில்
காலாவதியாகுமுன்
காலம் நகர்த்திச்சென்ற
படகொன்றில்
துடுப்பசைத்துச்செல்கின்றன
தன்னையள்ளிக்கொள்ளும் இலக்கு தேடி..

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி :-)

Friday, July 15, 2011

தாளஸ்வரங்கள்..

(படத்துக்கு நன்றி இணையமே)
காலிவயிற்றின் உறுமல்களை
எதிரொலித்த வாத்தியங்களும்
தன்னிலை மறந்து
தாளமிட்ட கால்களும்
ஓய்வெடுக்கும்
சிலஇடைக்காலத்துளிகளில்,
மெல்லியதாய் முனகிக்கொள்கின்றன
தட்டில்விழும் வட்ட நாணயங்கள்;
ஸ்வரம் தப்பாமல்
இறைஞ்சும் குரலுடன் இழைந்து..



டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணை மற்றும் வல்லமை இதழ்களுக்கு நன்றி :-)

Tuesday, July 12, 2011

அன்புடன் ஒரு மடல்..

(படத்துக்கு நன்றி.. இணையம்)
உனதும் எனதுமாய்
பிரிந்து நின்ற நம் எண்ணங்கள்,
நமதானபோது
பிரிவென்னும் சுனாமி
புரட்டிப்போட்டது நம்மை..

ஓருயிராயிருந்த
ஈருடலிலொன்று..
விட்டுச்சென்ற வெறுங்கூட்டில்,
சடசடத்தடங்கும்
எண்ணப்பறவைகளின் சிறகுகள்
வருடிக்கொடுக்கின்றன
குருதியொழுகும் நினைவுத்தழும்புகளை..

வண்ணமிகு எனதுலகின்
அத்துணை ஜன்னல்களிலும்,
இருட்டின் வாசம் வீசவிட்டு,..
உன்னில் நானடக்கமென்பதை
சொல்லாமல் சொல்கிறதடா நம்பெயர்
என்று,
இன்னொரு கத்தியை செருகிச்செல்கிறாய்
காயத்துக்கு மருந்தாக..
நாளை வரை காத்திருக்க
நானொன்றும் ராமனல்ல;
வந்துவிடு சீக்கிரம்...

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட வல்லமைக்கு நன்றி :-)

Tuesday, May 3, 2011

சன்னமாய் ஒரு குரல்...



மரணத்தின் வாசம் நிரம்பிய
சிதறிக்கிடக்கும் துளிகளினூடே..
வீதியெங்கும் என் விருட்சங்கள்
இழுத்துச்செல்லப்படும்போதும்
பரபரத்துப்பதறி
பற்றிட நினைக்கும்
என் கைகள் வெட்டப்படும்போதும்
நானெழுப்பும் கூக்குரல்
ஏனோ..
உங்கள் காதுகளை வந்தடைவதில்லை.

கருவறையே கல்லறையாவது
பெண்களுக்கு மட்டுமான
தலைவிதியென்றாலும்,
பெண் விரல்களாலும்
அது எழுதப்படுகிறது,
சில கையறுநிலைகளில்..

துளிர்த்துத்தழைக்கும்
குருத்துகளை
வேருடன் நசுக்கியெறிந்துவிட்டு;
மலர்களைத்தேடும் வீணர்களே...
மிஞ்சியிருக்கும் முட்களில்
வாசனையைத்தேடாதீர்..

உணவென்று நம்பி,,
பசிபோக்கிய பால்
சுரந்தது கள்ளியிலிருந்தென்று அறியுமுன்னே,..
உறக்கம் கொண்டுவிட்டோம்
கள்ளித்தாய்மடியிலேயே........
பெற்றவளின் முகம்கண்ட திருப்தியினூடே
அறுக்கிறதொரு கேள்வி;
என் முகம் அவள் பார்த்த,  தருணமென்றொன்று ....இருந்திருக்குமா?????

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

Wednesday, March 9, 2011

பொதுவான புள்ளியொன்றில்..

அலைகளையும் தலைகளையும்
எண்ணிக்கொண்டும்,
கடலுடன் சேர்ந்துறுமும்
வயிற்றுக்கு பதிலளிக்கவொட்டாமல்
தகிக்கும் மனதின் சூட்டை
கடலைக்கு கடத்தியபடியும்;
தன்பக்கம் திசைதிரும்பும் கால்களை எதிர்நோக்கியும்
காத்துக்கொண்டிருந்த பொழுதுகளிலெலாம்,
கண்கள் பூத்துப்போகத்தான் செய்கிறது
கடற்கரையோர கடலைவியாபாரிக்கு..
அவரவர் சட்டைப்பையைத்துழாவும் கைகள்
வெளிக்கொண்டு வருவதெலாம்
ஏதோவொரு காகிதமாகவும் கைக்குட்டையாகவும்
இருக்கும்போதெலாம்,
பள்ளிக்கட்டணமும், மருந்துச்செலவும்
காற்றிறைத்த மணலாய்
உறுத்திக்கரிக்க..
உள்ளூர சலித்துக்கொள்கிறார்
பிளாஸ்டிக் பணயுகத்தையும்
பாக்கெட் தின்பண்டங்களைப்பற்றியும்..
தன்னிச்சையாக அள்ளியிறைத்தாலும்
சற்றுத்தாராளமாகவே விழுகின்றன கடலைமணிகள்,
ஒண்டிக்கொண்ட சிறு அவகாசத்தில்
நட்பாகிப்போன புறாவொன்றுக்கு..
நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்..
வாடிக்கையாளருக்காகவும் சிந்தும் கடலைக்காகவும்.....
காத்திருத்தலென்னும்
இருவரையும் இணைக்கும்
பொதுவான புள்ளியொன்றில்.

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி..

Wednesday, March 2, 2011

முன்னேற்றம்..


திட்டமிடப்படாமலும்
எல்லாம்
நடக்கிறதெனினும்;
தற்செயலாகவும்
மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை..
எவருக்காகவும்
எப்பொழுதும்
காத்துக்கொண்டிருக்காத.. காலம்.
இலையுதிர்காலத்து மரமென
வாய்ப்புகளை உதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

சேமிக்கப்பட்ட கனவுகள் ஒவ்வொன்றும்,
நெஞ்சக்கனலின் தணியாவெப்பத்தில்
வளர்சிதையுமுன்
பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்க..
காற்று நகர்த்திச்சென்று சேர்க்கிறது
ஒவ்வொரு இலையாக..

சருகாகவிட்டு சோம்பிக்கிடக்கின்றன
தலைவிதியென்றும்
தலையெழுத்தென்றும்
தன்னைத்தானே நொந்துகொண்ட
கிணற்றுத்தவளைகள்..
கனவுகள் காலாவதியாகுமுன்
உதறியெறிந்த வாய்ப்புகளை
மீண்டும் கண்டடையத்தெரிந்தவை மட்டுமே
மீண்டு கரைசேர்கின்றன..

ஆசைக்கும் அறிவுக்குமான போட்டிக்களத்தில்
வாய்ப்புகள் ஜெயித்துவிட
விருப்பங்கள் இல்லாமலேயே
மாற்றி நடப்பட்டாலும்..
பெருங்கடலாயினும், குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக்கற்றுக்கொண்ட மீன்கள்.

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி..



Sunday, January 30, 2011

ரத்தக்கடல்..





உயிர் தரித்திருப்பதென்பது
மீனுக்கு மட்டுமல்ல
மீனவனுக்கும் போராட்டமாகிவிட்டது
தினந்தோறும்!!!..
கடலுக்குள் அழுவதால்
எங்கள் மீனவனின் கண்ணீரும்
வெளியில் தெரிவதில்லை போலும்..
காராக்கிரகத்தையும் குண்டுகளையும்தவிர
மரணமும் பரிசாய்க்கிடைப்பதுண்டு அவனுக்கு.

வாக்குச்சீட்டில் 
குத்திய பாவத்துக்கு
முதுகில் குத்தப்படுவதென்பது,
சாபக்கேடான வாடிக்கையாகிவிட்டதென்றாலும்;
மறுபடியும் நாடித்தான் செல்கிறோம்
விட்டில்பூச்சிகளாய்,
விடிவெள்ளியென பொய்மினுங்கை பூசிக்கொண்ட
தீப்பந்தங்களை நோக்கி.

இறையாண்மையென்று பொய்க்கூக்குரலிட்டு
தன்சொத்தைப்பாதுகாக்கும்
மயில்வேடமிட்ட வான்கோழிகளுக்கு,
உயிரையே சொத்தாய்க்கொண்ட
எளியவனை 
இலவசமெதுவும் பெற்றுக்கொள்ளாமல்
மனிதனாய் நீடிக்கும் யாரேனும் அறிமுகப்படுத்தி வையுங்கள்..
நம்முடைய இரைக்காகவும்தான்
அவன் செத்துமடிகிறான்.

எல்லை கடந்தும் தாக்கும்
எல்லையில்லா பயங்கரவாதத்தை
தடுக்கவொட்டா எல்லைச்சாமிகளாய்..
வாக்குறுதிகளை
வரமெனவீசிவழங்கும் கூட்டம் வருமுன்
நமக்கு நாமே
உறுதிக்காப்பிட்டுக்கொள்வோம் 
மனிதம்மட்டுமே காப்போமென்று..

டிஸ்கி:  தமிழக மீனவர்களின் மீது நடைபெறும் கட்டவிழ்த்த வன்முறையை கண்டித்து, அனைவரும் கூட்டு முயற்சியில், அனுப்பவிருக்கும் இந்த மனுக்கடிதத்தில் நான் 1870 ஆவது நபராக கையெழுத்திட்டு விட்டேன். அப்ப நீங்க?????


விண்ணப்பம் இங்கே இருக்கு.





Monday, January 24, 2011

கைவரப்பெறாமல்..


எதையாவது எழுத நினைத்து
எதையாவது
கிறுக்கிவைக்கிறேன்..
கண்ணாடித்திரைக்கப்பால்
கண்சிமிட்டும்
கோஹினூரென
கைவரப்பெறாமலே,
சுற்றிச்சுழன்றடிக்கும்
கனவுமண்டலத்தின் பெருவெளியில்
சுதந்திரப்பறவையாய்...
நீந்திச்செல்கிறது ஒரு கவிதை..
சலனமற்றிருந்த மனக்குளத்தில்
அலையெழுப்பிய கல்லால்
வரிசையற்றலையும் எழுத்தெறும்புகள்
கலைந்தோடுவதை
வேடிக்கை பார்த்தபடி..

டிஸ்கி: இந்த கவிதையை வெளியிட்ட கீற்று இணைய இதழுக்கு நன்றி.

Wednesday, January 19, 2011

ஸ்பரிசம் பற்றிய ஞாபகம்..

கடைசியாக
எப்போது கிடைத்ததென்று
மூளையறைகளை காலிசெய்தும்
கிடைக்கவில்லை
ஸ்பரிசம் பற்றிய ஞாபகம்..
கன்னம் வழித்துமுறிக்கும்
சுருங்கிய விரல்களைப்பார்க்கையில்
வராத ஞாபகத்தை,
காதலுடன் கோர்த்த
விரல்களைக்காண்கையில்
தோன்றாத ஏக்கத்தை,
பிஞ்சுவிரல் பற்றிச்செல்லும்
அன்னையின் விரல்கள்
திறந்து கொணர்ந்தன,
ஞாபகப்பேழையில்
பொக்கிஷமாய் பாதுகாக்கும்,
வீட்டில் அவன் கழித்த கடைசி இரவையும்;
தலை கோதிய அன்னையின் ஸ்பரிசத்தையும்..
தொடுகைக்கான ஏக்கத்தையும் சேர்த்து
துடைத்துக்கொள்ளும்போது
கண்ணீருடன் சொட்டிக்கொண்டிருந்தன,
ரத்தப்பஞ்சு மூட்டையினூடே
அவன் விரல்களும்..


டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட கீற்று இணைய இதழுக்கு நன்றி.


Saturday, January 15, 2011

கீற்றென..


ஆதவனே நீ வாழி!!
கட்டிளம் காளை உனை
சுற்றும்.. எண்ணிலடங்கா கன்னியருள்,
நீ மாலைசூட்டியது
பூமிப்பெண்ணுக்கு மட்டுமே..
சோதரிக்கு துணைவந்த
சந்திரனையும்
அன்பளித்து வசப்படுத்தும் தந்திரம்,
உன்னிடம் மட்டுமேயுள்ளது..
எனினும்,
உன் முன்னால், அவன் வருவதேயில்லை,
உங்களுக்குள்ளும் வரப்புத்தகராறோ!!

பூமியின் வியர்வையை
திரவத்தங்கமாய்ப்பொழியவைக்கும்
செப்பிடு வித்தைக்காரனே!!
உக்கிரம் தாங்காமல்
சலித்திட்ட போதிலும்,..
உன்னை,
விரும்பியழைக்கின்றோமொரு,  மார்கழிக்குளிரில்;
அபகரணம் செய்யப்படுகிறாய்
சில பொழுதுகளிலெனினும்,
மீண்டு வந்து புன்னகைக்கிறாய்
கீற்றென..
பச்சையக்கூட்டணியுடன்
நீ நடத்தும் ஆட்சியில்,
இலவசங்களுக்கும் கணக்கில்லை..
உலகுக்கே படியளக்கும் ஆதாரசக்தியுன்னை
தெண்டனிட்டு வணங்குகின்றோம்..
வாழ்த்துகின்றோம்;
உனக்கென்றோர் பண்டிகையில்..


Wednesday, January 12, 2011

ரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..

(படம் உதவி: கூகிள்)

பிளாஸ்டிக் பெட்டிகளுடன்
இரும்புப்பெட்டிக்குள்
கடைவிரிக்கும்
எதிர்கால தொழிலதிபர்கள்,
வழக்கமான வாடிக்கையாளருக்கென்று
திறந்துவைக்கும் சிறிய சாம்ராஜ்யத்தில்;
தொண்டை கிழிய
கத்தியபின்னும், மிஞ்சுகின்றன..
இன்னும் நிரம்பியிருக்கும் பெட்டிகளும்
ஒரு தேனீருக்கான
சில சில்லறைகளும்..

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி..