Pages

Tuesday, March 16, 2010

முடிவில்லா தேடல்..

மனிதனே,
இந்த விண்ணிலும்
மண்ணிலும்
நீ எதைத்தேடி
அலைகின்றாய்;

எட்டாத உயரத்தில் கூட ஏறிச்சென்று,
நீ எதைப்பிடிக்க
முயலுகின்றாய்?

நாம் பறக்க விட்டுவிட்ட
மனிதாபிமானத்தையா!
அல்லது,
குழி தோண்டிப்புதைத்து விட்ட
பண்பாட்டையா?

கடவுளைப்போலவே
இவைகளின்
இருப்பும், சந்தேகத்துக்கிடமாகி
வெகு காலமாகிவிட்டது.

விலைவாசியுடன்
போட்டி போட்டுக்கொண்டு
நீ பறந்தது போதும்;
சற்றே உன் இறக்கைகளுக்கு,
இளைப்பாறல் கொடு.

கற்பனைச்சிறகுகளினூடே
தெரியும் நிஜ உலகத்தை;
உன் மூன்றாவது கண்
கண்டுபிடிக்கட்டும்.

உயர்ந்த குறிக்கோள்களுக்காகவே
படைக்கப்பட்ட வாழ்வின்;
முடிவில்லா தேடலின் முடிவில்
ஏதேனும் மிஞ்சும்.


Saturday, March 13, 2010

கான்க்ரீட் காடுகள்..



காடுகளை அழித்து
இன்னொரு காடு.
மனித நேயம்
பட்டுப்போனாலும்;
பணம் காய்ச்சி மரங்கள்
நிறைந்திருக்கும் இங்கே..

குயிலோசை ஓய்ந்தாலும்
தொலைக்காட்சி உண்டெங்களுக்கு
தாலாட்ட..
மார்கழிப்பனியாய்
தொழிற்சாலைப்புகை இருக்க
ஏலோரெம்பாவாய் பாட
எழுந்திருப்பதில்லை நாங்கள்.

விருட்சங்கள் கூட
எங்கள் வீடுகளில்,
இயல்பைத்தொலைத்து,
குறுகி நிற்கின்றன.

வாழ்விடம் போலவே
மனமும் குறுகிப்போய்,
கான் கிரீட் காடுகளில் வாழும்
நாங்களும் ஆதிவாசிகள்தாம்.


Monday, March 1, 2010

சுதந்திரம்???..

கண்ணுக்குத்தெரியாத
தளைகளால்
பிணைக்கப்பட்டிருக்கிறேன்..

பூட்டுகள் எதுவும்
இல்லைதான்...
ஆனாலும்
விடுபடவும் முடியவில்லை!!!!

உனது விருப்பங்களெல்லாம், என்றோ
எனது
விருப்பங்களாகிவிட்டன:
எனக்கென்று ஓர் மனம்,
அதை நினைத்ததேயில்லை நீ..

எனக்கான
பிறரது கேள்விகளுக்கு;
பதில் சொல்லும் குரலாக
உன் குரல் மட்டுமே ஒலிக்கின்றது.

குனிந்து கொடுத்தே குறுகிப்போன
முதுகின் மேல்,
ஏற்றப்படுகின்றன
வேண்டியமட்டும் பாரங்கள்;

சுமந்தே களைத்துப்போன
என்னைக்காட்டி
பெருமையடிக்கிறாய்:
சுதந்திரமாய் வைத்திருப்பதாக!!!!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
இங்கே அளவுகோல்
வேறாக இருக்கும்வரை
எதைச்சொல்வாய் நீ??
உண்மையான சுதந்திரமென்று??!!!..